உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுக்குமாடி குடியிருப்பு சங்க பதிவு அமலுக்கு வராத புதிய விதிகள்

அடுக்குமாடி குடியிருப்பு சங்க பதிவு அமலுக்கு வராத புதிய விதிகள்

சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் மற்றும் விதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி பதிவுத்துறை அதிகாரிகள், சங்கங்களை பதிவு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், தங்களுக்குள் ஒன்று சேர்ந்து சங்கம் ஏற்படுத்த வேண்டும். அதை முறையாக பதிவு செய்து, சட்ட விதிகளின்படி நடத்த வேண்டும். இந்தச் சங்கம், அந்தந்த குடியிருப்பின் பராமரிப்பு பொறுப்பை ஏற்று செயல்படுத்தும். ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு விபரங்கள், நிர்வாகிகள் மாற்றங்களை, பதிவுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதுவரை, பொதுவான சங்கங்களை போன்று, தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கங்களும் பதிவு செய்யப்பட்டன. கடந்த, 2022ல் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள், கடந்த செப்டம்பர், 24ல் வெளியிடப்பட்டன. புதிய சட்டம் மற்றும் விதிகளின்படி, நான்கு வீடுகளுக்கு மேல் இருந்தால், அந்த குடியிருப்பில் உரிமையாளர்கள் சங்கம் அமைக்க வேண்டும். சங்கப்பதிவை கண்காணிக்கும் அதிகாரியாக, மாவட்ட பதிவாளர் இருப்பார். புதிய சட்டத்தின்படி, வீட்டு உரிமையாளர் சங்கங்களை பதிவு செய்ய வேண்டும்; அதற்கான கட்டண விகிதங்களையும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள், பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், புதிய சட்டப்படி வீட்டு உரிமையாளர் சங்கங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், புதிதாக பதிவுக்கு வரும் சங்கங்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இப்போதும் புதிய சங்கங்கள், ஏற்கனவே உள்ள சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்யப்படுகின்றன. புதிதாக வந்துள்ள சட்டம், விதிகள் குறித்து, மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை என, பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். புதிய சட்டத்தை அமல்படுத்த, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையும், பதிவுத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Ramamurthy
பிப் 03, 2025 07:05

வணக்கம் தமிழக அரசு தமிழ்நாடு அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் சங்கம் புதிய விதியின்படி பதிவு செய்ய வேண்டும் அரசாணை வெளியிடும் இதுவரை பதிவுத்துறையில் பதிவிட மறுக்கின்றார்கள் ஆவன செய்ய வேண்டும்.


R Ramamurthy
பிப் 03, 2025 06:52

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தை புதிய விதியின்படிதமிழ்நாடு பதிவுதுறையில் பதிவு செய்வதில்லை அங்கிருக்கும் அதிகாரிகளை கேட்டால் அரசாங்கத்திலிருந்து எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று தட்டி கழிக்கிறார்கள் தினமலர் நாளிதழில் விளம்பரம் செய்து சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உதவி புரியும் படி உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் இப்படிக்கு பெல்லி ஏரியா பிளாக் 283 பிளாக் ஓனர் அசோசியேஷன் ஜெய்ஹிந்த் பிளாட்அண்ணா நகர் வெஸ்ட் சென்னை 40


முக்கிய வீடியோ