உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன உயிரினங்கள் கடத்தல் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம்

வன உயிரினங்கள் கடத்தல் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம்

சென்னை:அரிய வகை வன உயி ரினங்கள் கடத்தல் உள்ளிட்ட வனக்குற்றங்கள் குறித்து, பொது மக்கள் 'ஆன்லைன்' முறையில் புகார் அளிக்க, புதிய இணையதளத்தை உருவாக்கும் பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது. தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள நட்சத்திர ஆமை, வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட கிளிகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை வைத்திருப்போர், அதை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதே போன்று, வனப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு பட்டியலில் உள்ள உயிரினங்கள் வேட்டையாடப்படுவது, கடத்தப் படுவது நடக்கிறது. வனப்பகுதிகளில் உயிரினங்கள் மட்டுமல்லாது, அவற்றின் அரிய பாகங்களை கடத்துவது, அதிகரித்து வருகிறது. இதனால், யானைகள், புலிகள், காட்டு மாடுகள் கொல்லப்படுவதும் அதிகரிக்கிறது. இதை தடுக்க, வன உயிரின குற்ற தடுப்புப்பிரிவு, சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. வன விலங்குகள் வேட்டை, அரிய வகை உயிரினங்கள் கடத்தல் ஆகியவை குறித்து, இந்த சிறப்பு பிரிவு புலனாய்வு செய்யும். இது போன்ற வழக்குகளுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்க, இப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது இப்பிரிவின் செயல்பாடுகளுக்கு, தனியாக ஒரு இணையதளத்தை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை உருவாக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவது, கடத்தப்படுவது தொடர்பாக, பொது மக்கள் எளிதாக புகார் அளிக்கும் வசதியுடன், இந்த இணையதளம் அமையும். அதே போல், வழக்கு விபரங்களை, வனத்துறையில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும், எளிதாக அறியும் வகையில், இதில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில், இந்த வசதி அமலுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி