| ADDED : மே 09, 2010 02:55 AM
பூந்தமல்லி : பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தபோது பிரபல ரவுடி சின்னா மற்றும் அவரது வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படையைச் சேர்ந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னா(41); பிரபல ரவுடி. கடந்த மாதம் 30ம் தேதி, வெடிகுண்டு வீசிய வழக்கில் ஆஜராவதற்காக பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தார். மதிய உணவு அருந்துவதற்காக தனது வக்கீலுடன் குமணன்சாவடி சென்ற சின்னாவை, 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில், ஜூனியர் வக்கீல் பகவத் சிங்கும் இறந்தார்.
கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி இக்கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த 6ம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த தாம்பரம் நாகராஜ்(22), ஜெயா(23) ஆகியோர் பூந்தமல்லி அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அவர்களை நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.