உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் வழக்கின் அடுத்த கட்டம்; ஊருக்கே டி.என்.ஏ., பரிசோதனை: ரகுபதி

வேங்கைவயல் வழக்கின் அடுத்த கட்டம்; ஊருக்கே டி.என்.ஏ., பரிசோதனை: ரகுபதி

புதுக்கோட்டை : “வேங்கைவயல் வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. டி.என்.ஏ., பரிசோதனையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. அதனால், அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே டி.என்.ஏ., பரிசோதனை செய்வது தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை,” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழக தேர்தலில் ஐந்து முனை போட்டி இருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார்; இரண்டு முனை போட்டி மட்டுமே இருக்கும். கூட்டணி கட்சிகளோடு தேர்தலை சந்தித்து, தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும்.தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.,வின் 'சி டீம்' என்று சொன்னது சொன்னதுதான்; விஜய், 'ஸ்லீப்பர் செல்' தான். அப்படி செயல்படுவோர், மேலிட உத்தரவின்படி தான் எதையும் செய்வர். போதைப் பொருள் கடத்தல் வழக்கி சிக்கிய ஜாபர் சாதிக் நிதியை, தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனம் பயன்படுத்தி இருப்பதாக கூறும் அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனம் ஒப்பந்தம் செய்த நிறுவனம், ஜாபர் சாதிக் நண்பரின் நிறுவனம் என்பது மட்டுமே உண்மை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், சி.பி.சி.ஐ.டி., அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டது. இருந்தபோதும், நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால், சி.பி.ஐ., விசாரணையால் கட்டாயம் காலதாமதம் ஏற்படும். ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது, இந்தியாவில் சாத்தியமற்றது. கடந்த ஆட்சி காலத்தில், மதுரை மத்திய சிறையில் ஊழல் நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் அப்படி நடக்கவில்லை. சிறை துறையில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்கள் என கூறவில்லை. தவறிழைப்போரை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருகிறோம். கோடநாடு கொலை வழக்கில், சாட்சிகளின் அடிப்படையில் தான் விசாரணை செய்ய வேண்டும். அதன்படி, விசாரணை செய்து வருவதால், காலதாமதம் ஏற்படுகிறது. கோடநாடு கொலை வழக்கு ஆதாரங்கள், கண்டிப்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கூட்டணியில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை. இவ்வாறு ரகுபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2024 11:15

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கூட்டணியில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை.. சொன்ன பின்னரே அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக குண்டாஸ் போடுவோம்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2024 11:14

அண்ணே, குற்றவாளிகள் எல்லாரையும் வேற ஊருக்கு அனுப்பிட்டு, அப்புறமா அந்த ஊருல எல்லாருக்கும் எல்லா டெ ஸ்டும் எடுத்து பார்க்கணும்.


முக்கிய வீடியோ