உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒன்பதாம் நுாற்றாண்டு மூத்த தேவி சிற்பம் விழுப்புரம் அருகே வானுாரில் கண்டெடுப்பு

ஒன்பதாம் நுாற்றாண்டு மூத்த தேவி சிற்பம் விழுப்புரம் அருகே வானுாரில் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றியத்தில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றியம், கோட்டக்குப்பம் அருகில் உள்ள தந்திராயன் குப்பம் கிராமத்தில், அவ்வூரைச் சேர்ந்த தரணி, ரமேஷ், முனுசாமி உள்ளிட்டோருடன் கள ஆய்வு மேற்கொண்டனர். மரத்தடி அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் நடப்பதை அறிந்து, அங்கு சென்றனர். அப்போது, கோவிலின் எதிரில் உள்ள மரத்தடியில் ஒருசாய்த்து வைக்கப்பட்டிருந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர். அது, தவ்வை எனும் மூத்த தேவி சிற்பம் என்பதை அறிந்தனர். இதுகுறித்து, மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: மூன்றடி உயரம், இரண்டடி அகலத்தில் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக மூத்த தேவி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. திண்டின் மீது அமர்ந்த நிலையில், இரண்டு கால்களையும் தொங்க விட்டுள்ள தேவி, தன் தலையில் கரண்ட மகுடம், காதில் மகர குண்டலம், கழுத்தில் ஆரம், கை, கால்களில் அணிகலன்கள், மார்புக்கு கீழ் சன்னவீரம் அணிந்துள்ளார். தன் வலது கையில் தாமரை மொட்டு வைத்துள்ளார். இடது கையை திண்டின் மீது வைத்துள்ளார். அவரின் வலது புறம் மகன் மாந்தனும், அவரது கையில் சிதைந்த நிலையில் துடைப்பமும், இடதுபுறம் மகள் மாந்தியும் அவரது கையில் காக்கை கொடியை ஏந்தியவாறும், சுகாசன கோலத்தில் உள்ளனர். கலையம்சம் பொதுவாக, பல்லவர் கால மூத்த தேவி சிற்பங்களில், காது குண்டலங்கள் வளையம் போல இருக்கும். இதில், பல்லவர் மற்றும் சோழர் கால பாணியில், கலையம்சத்துடன் குண்டலங்கள் உள்ளன. அதனால், இது, பிற்கால பல்லவர்களின் ஆட்சி காலமான, 8 - 9ம் நுாற்றாண்டில் செதுக்கப்பட்டு, வழிபாட்டில் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை