எப்.எஸ்.ஐ., கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி., வேண்டாமே! மத்திய அமைச்சருக்கு கிரெடாய் கடிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும்போது, தளபரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., கட்டணத்துக்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த கூடாது' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அமைப்பு வலியுறுத்தி உள்ளது.18 சதவீதம்
நிலத்தின் பரப்பளவில் எத்தனை மடங்கு கட்டடத்தின் தளபரப்பு இருக்கலாம் என்பதற்கான குறியீடு தான் எப்.எஸ்.ஐ., எனப்படுகிறது.தற்போது, மனையின் பரப்பில் இரண்டு மடங்கு என்ற அளவில் எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்படுகிறது. இதற்கு மேல் தேவைப்படுவோர், கூடுதல் கட்டணம் செலுத்தி, 'பிரீமியம் எப்.எஸ்.ஐ.,' அனுமதி பெறலாம்.கட்டுமான பொருட்களை வாங்கும்போது, தனித்தனியாக ஜி.எஸ்.டி., வரி செலுத்தப்படுகிறது.இதன்பின், வீடு விற்பனையின்போதும், கட்டுமான பணி மதிப்பு அடிப்படையில் தனியாக ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.இந்நிலையில், கட்டட அனுமதியின்போது தளபரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., கட்டணங்கள் மீது, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும் என, மத்திய அரசு, 2022ல் அறிவித்தது.அதற்கு, அப்போதே கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், ஜி.எஸ்.டி., விதிப்பு அமலுக்கு வராமல் இருந்தது.விலை உயர்வு
தற்போது, அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, 'கிரெடாய்' அமைப்பின் சென்னை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:கட்டுமான திட்டங்களுக்கான எப்.எஸ்.ஐ., கட்டணங்கள், கூடுதல் எப்.எஸ்.ஐ., கட்டணங்கள் ஆகியவற்றின் மீது, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பது, ரியல் எஸ்டேட் துறையை கடுமையாக பாதிக்கும்.ஏற்கனவே கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களில், கட்டுமான திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.முன்தேதியிட்டு அல்லது தற்போதைய தேதியிட்டு, இந்த வரியை அமல்படுத்தினால், வீடு விற்பனை பாதிக்கும். மத்திய அரசின் நோக்கமான அனைவருக்கும் வீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில், இது முட்டுக்கட்டையாக அமையும்.இந்த வரி விதிப்பால் வீடுகளின் விலையில், 7 முதல், 10 சதவீதம் வரை உயர்வு ஏற்படும்.எனவே, எப்.எஸ்.ஐ., கட்டணங்கள் மீது, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை கைவிட வலியுறுத்தி, மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.