புதுடில்லி: பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவலை ராணுவம் மறுத்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக பாக்.,கில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் தகர்த்தது. இரு நாடுகளின், டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மட்டத்தில், 'ஹாட் லைன்' வாயிலாக நடந்த பேச்சில், தாக்குதலை நிறுத்த முடிவானது.இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு தற்காலிகமானது என்றும், அது முடிவுக்கு வந்து விட்டதாகவும், மீண்டும் பேச்சு நடத்தி, போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதை நம் ராணுவம் மறுத்துள்ளது. ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போர் நிறுத்தம் தொடர்பாக, டி.ஜி.எம்.ஓ., மட்டத்தில் பேச்சு நடத்தும் திட்டம் எதுவும், இந்தியா - பாக்., இடையே இல்லை.'அதே நேரத்தில், மே 12ல் இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ.,க்கள் நடத்திய பேச்சின்போது ஒப்புக்கொண்ட போர் நிறுத்த அறிவிப்பு, தொடர்ந்து அமலில் இருக்கும். அதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது' என்றார்.இது குறித்து பாக்., வெளியுறவு அமைச்சர் இசாக் தார் கூறுகையில், ''போர் நிறுத்த அறிவிப்பை பாகிஸ்தான் மீறவில்லை. இனியும் மீறாது. பேச்சு வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம்,'' என்றார்.பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''இந்தியாவுடன் அமைதி பேச்சு நடத்த பாக்., தயாராக உள்ளது,'' என்றார். இதையடுத்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே அடுத்த கட்ட பேச்சு நடத்துவதற்கான தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.