திருச்சி ஏர்போர்டில் உணவகங்கள் ஓய்வறைகள் இல்லை: பயணியர் அவதி
சென்னை:திருச்சி விமான நிலைய முனையத்தில், உணவகங்கள், 'லவுஞ்ச்' எனப்படும் ஓய்வறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படாதது, பயணியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பயணியர் அதிகம் வந்து செல்லும் விமான நிலையம் திருச்சி. இங்கிருந்து, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், மஸ்கட், அபுதாபி, ஷார்ஜா, துபாய் போன்ற, சர்வதேச நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் செயல்பாட்டுக்கு வந்தது. அதில், 'பயணியருக்கு தேவையான கடைகள், உணவகங்கள், ஓய்வறைகள் போன்றவை அமைக்கப்படும்' என்று, அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை எந்த பணிகளும் முடியவில்லை. விமான நிலைய ஆணைய அதிகாரிகளும், 'டெண்டர்' போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், பயணியர் அவதி அடைந்து வருகின்றனர்.இதுபற்றி, விமான பயணியர் சிலர் கூறியதாவது:திருச்சி விமான நிலையத்தில், பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. களைத்து வருவோர், சற்று நிம்மதியாக அமர, ஓய்வறை வசதி இல்லை. மற்ற இரண்டாம் நிலை விமான நிலையங்களை விட, திருச்சியில் வசதிகள் குறைவாக உள்ளன. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், டீ, காபி அருந்த ஒரு கடை மட்டுமே உள்ளது; உணவகங்களும் கிடையாது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது சிரமம் அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், பயணியர் மற்ற விமான நிலையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவர். முனையங்களுக்கு வரும் கார்களுக்கு, சுங்கச்சாவடியில் போதிய ஆட்கள் கிடையாது. நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிஉள்ளது. பயணியர் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. இங்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, திருச்சி விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வர ராவை கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.