வடகிழக்கு பருவமழை வரும் 18ல் துவங்க வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, வரும் 18ம் தேதியன்று துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 30ல் துவங்கியது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்தது. தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.ஒவ்வொரு பகுதியிலும் பருவமழை விலகலுக்கான தேதிகளை, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், இறுதி கட்டமாக வரும் 15ல் தென்மேற்கு பருவக்காற்று விலகும் என்று கூறப்படுகிறது. இந்த கணக்கீட்டின்படி, தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 1994, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில், அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதையும் வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வரும் 4ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.