உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி துறை செயலருக்கு நோட்டீஸ்

ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி துறை செயலருக்கு நோட்டீஸ்

சென்னை: கிருஷ்ணகிரியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி துறை செயலர், நிதித்துறை செயலர் ஆகியோர் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒன்னல்வாடி அரசு உயர் நிலைப் பள்ளியில், முதுநிலை தெலுங்கு ஆசிரியராக பணியாற்றுகிறேன். சிறுபான்மை மொழி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தமிழக அரசு, 2003ல் தேர்வு நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு ஆகஸ்ட், 14ல் தெலுங்கு மொழி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்நிலையில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003ம் ஆண்டு ஏப்ரல், 1 முதல், அதாவது முன் தேதியிட்டு ரத்து செய்து, அதே ஆண்டு ஆகஸ்ட், 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது. நிதியிழப்பு இதன் காரணமாக, என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது. ஆனால், அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே, தேர்வு நடவடிக்கையை துவக்கியதால், என் பெயரை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி மனு அளித்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது என தெரிவித்ததால், அரசு ஊழியருக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது. முன் தேதியிட்டு பணப்பலன்களை குறைப்பது, அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது என, உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இதேபோல, சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்து உள்ளது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் தகுந்த முடிவை அரசு எடுக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு அக்டோபர், 29ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால், உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் ரமேஷ், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. தள்ளிவைப்பு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ''நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. மனுதாரரின் மனுவை முறையாக விசாரிக்காமல் நிராகரித்து உள்ளனர் என்பதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், தமிழக முதன்மை கணக்கு அதிகாரி அனிம் செரியன் ஆகியோர் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு, விசாரணையை அக்டோபர், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ