பணி நிரந்தரத்தை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, செவிலியர்கள் இன்று (நவ.,12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து, சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில், 6,500 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை முழுமையான காலமுறை ஊதியத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக முறையில் பணி செய்யும், அனைத்து செவிலியர்களையும், எம்.ஆர்.பி., வாயிலாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அதேபோல, அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியர் கல்லுாரிகளில், செவிலியர்கள் மற்றும் செவிலிய போதகர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கா விட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.