உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிலக கட்டடம், மனை வரன்முறை சாத்தியக்கூறுகளை ஆராயும் அதிகாரிகள்

தொழிலக கட்டடம், மனை வரன்முறை சாத்தியக்கூறுகளை ஆராயும் அதிகாரிகள்

சென்னை : தமிழகத்தில், குறைவான விதி மீறல்களுடன் இருக்கும் தொழிலக மனைகள் மற்றும் கட்டடங்களை வரன்முறைபடுத்த, புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். தமிழகத்தில், தொழிலக பயன்பாட்டில் இருந்து வரும் மனைகள் மற்றும் கட்டடங்களில் சிறிய அளவில் விதிமீறல்கள் உள்ளன. அதனால், இந்த நிலங்கள் மற்றும் கட்டடங்களில் புதிதாக தொழில் துவங்கும் போது, அதற்கு அனுமதி பெறவும், ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்கள் உரிமங்களை புதுப்பிப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இவற்றை வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: தமிழகத்தில் தொழிலக பயன்பாட்டில் உள்ள மனைகளில், தேவை அடிப்படையில் சில உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று, கட்டடங்களில் கூடுதல் பகுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற குறைந்த பட்ச விதிமீறல் உள்ள மனைகள், கட்டடங்களை வரன்முறை செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் போன்று, இதற்கும் தனி திட்டம் அறிவிக்கலாம். இவ்வாறு தனி திட்டம் செயல்படுத்தினால், தொழில் நிறுவனங்களின் பிரச்னைகள் தீர்வதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இதை கருத்தில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என, அரசிடம் முறையிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழிலக மனைகள், கட்டடங்களை வரன்முறைப்படுத்த, தனி திட்டம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சட்ட ரீதியாக இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உரிய முடிவு எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி