உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய கற்கால கருவிகள் திருச்சி அருகே கண்டெடுப்பு

பழைய கற்கால கருவிகள் திருச்சி அருகே கண்டெடுப்பு

சென்னை:திருச்சி மாவட்டத்தில் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை, சென்னை பல்கலை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.சென்னை பல்கலை, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் பரத் கிருஷ்ணமூர்த்தி, பிரகதீஸ்வரன் ஆகியோர், திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு செய்தனர். அப்போது, துறையூர் ஒன்றியம், ராஜபாளையம், குரும்பப்பட்டி, கல்லிக்குடி கிராமங்களில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 'குவார்ட்ஸ்' என்ற வழுவழுப்பான வெள்ளைப்படிவு பாறைகளில் செய்யப்பட்ட முக்கோண கருவிகளை கண்டெடுத்தனர்.அவற்றை ஆய்வு செய்ததில், தமிழகத்தில் 17 லட்சம் ஆண்டுகளில் இருந்து, 3 லட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கள் என்பதை அறிந்தனர்.இதுகுறித்து, பரத் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:தமிழகத்தில் பழைய கற்கால கருவிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் கிடைக்கின்றன. இவற்றின் காலம் 17 லட்சம் ஆண்டுகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, நுண் கற்காலம் முதல் இரும்பு காலம் வரை, அதாவது 50,000 ஆண்டுகளில் இருந்து, 5,000 ஆண்டுகள் வரை வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், துாத்துக்குடி மாவட்டம் தேரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதிகளில் கிடைத்துள்ளன.தென் மாநிலங்களில், கர்நாடகாவில் உள்ள ஷாகர்கட்டா, ஷிவமோகா மாவட்டங்களில் தான், 'குவார்ட்ஸ்' கற்கருவிகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக, பழைய கற்காலம் மற்றும் இடை பழங்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், குவார்ட்ஸ் வகை கல்லில் கருவிகளை செய்து, கோடரி உள்ளிட்டவையாக பயன்படுத்தி உள்ளனர். இதற்கான சான்றாக, தற்போது கிடைத்துள்ள கற்கள் உள்ளன. இது போல், 150க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டறிந்துள்ளோம். இவற்றுடன், கற்கருவிகளில் இருந்து செதுக்கப்பட்ட கத்தி போன்ற கருவிகளும், சிதிலங்களும் கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ