உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 2, 1943தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில், ராமசாமி - சின்னத்தாய் தம்பதியின் மகனாக, 1943ல், இதே நாளில் பிறந்தவர் இளையராஜா எனும் ராசய்யா. சிறு வயதில் அண்ணன் வரதராஜன், தம்பி கங்கை அமரனுடன் இணைந்து, 'பாவலர் பிரதர்ஸ்' இசைக்குழுவில் ஹார்மோனியம் இசைத்து, பாடினார். இசையமைப்பாளராகும் கனவுடன், சென்னை வந்தார்; தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை நுட்பங்களை கற்றார். பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள, 'டிரினிட்டி காலேஜில்' தங்கப் பதக்கத்துடன், கிடார் இசையை கற்றார். இசைஅமைப்பாளர்கள் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.பஞ்சு அருணாசலம் இயக்கிய அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைப்பாளராகி, 'மச்சானை பாத்தீங்களா...' பாடலால் பிரபலமானார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை பாணி பாடல்களால் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் செல்வாக்கு பெற்றார். பல மொழிகளில், 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும், 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்து, 'இசைஞானி'யாக வலம் வருகிறார்.இவரின், 'சிம்பொனி' இசைக்குறிப்புகள், லண்டன், 'ராயல் பிலாரமோனிக்' இசைக்குழுவால், 'வேலியன்ட்' எனும் பெயரில் இசைக்கப்பட்டு, உலகப்புகழ் பெற்றார். 'பத்ம' விருதுகளை பெற்றுள்ள இளையராஜாவின், 82வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 02, 2025 01:51

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.....இசை அரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!!!


Oviya Vijay
ஜூன் 02, 2025 01:50

இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி என்றும் ஆனால் கலைஞர் கருணாநிதியின்பால் தான் கொண்ட அன்பால் அவருடைய பிறந்தநாள் அன்று (ஜூன் 3) தன் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டாமென்பதற்காக தன் பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூன் 2ம் தேதி மாற்றிக் கொண்டதாக ஒரு செய்தியைப் படித்திருக்கிறேன். உண்மை தெரிந்தவர்கள் இதனை இங்கே உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி...