மஹாராஷ்டிரா தேர்தலால் வெங்காயம் விலை உயர்வு
சென்னை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் காரணமாக, தமிழகத்தில் வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.நம் நாட்டில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான், பெரிய வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் உற்பத்தி நடந்து வருகிறது. மஹாராஷ்டிராவின் நாசிக் சந்தை நிலவரத்தை வைத்தே, பெரிய வெங்காயம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, மஹாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் குறைவாக உள்ளது. கையிருப்பில் உள்ள வெங்காயம் தான் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், வெங்காயத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினால், மாநிலத்தில் தட்டுப்பாடு ஏற்படும்; விலை திடீரென உயரும். இது, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுங்கட்சி கருதுகிறது.எனவே, வெளி மாநிலங்களுக்கு வெங்காயம் எடுத்து செல்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வருவது குறைந்துஉள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மட்டுமே வெங்காயம் வருகிறது. அவை போதுமான அளவில் இல்லை. எனவே, வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்னை கோயம்பேடு சந்தையில், முதல்தர பெரிய வெங்காயம், கிலோ, 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் தர வெங்காயம், 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், வெளிச்சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிக்கும். அதன்பின், விலை கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.