உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு இளைய தலைமுறைக்கு அழைப்பு

தமிழில் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு இளைய தலைமுறைக்கு அழைப்பு

சென்னை: சுவாமி சதேவானந்த சரஸ்வதியின் இளைய தலைமுறைக்கான, 'ஆன்லைன்' ஆன்மிக வகுப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இமயமலை அடிவாரத்தில், ரிஷிகேஷ் நகரின் கங்கைக்கரையில் உள்ள பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த ஆசிரமத்தில், வேத சாஸ்திரங்களை பயின்று, முறைப்படி சன்னியாச தீட்சை பெற்றவர், சுவாமி சதேவானந்த சரஸ்வதி. இவர், இளைய தலைமுறைக்கு ஆன்லைனில், தமிழ் ஆன்மிக வகுப்புகளைத் துவங்க உள்ளார். முக்கிய பாடத் திட்டங்களாக, பிராணாயாமம், தியானம், சத்சங்கம், ஆன்மிக வினா - விடை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல ஆன்மிக நுால்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இலவச பயிற்சியில், ஜாதி, மத, இன, பாலின வேறுபாடின்றி, ஆன்மிகத்தில் ஆர்வமுள்ள ஆண், பெண்கள் சேரலாம். தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் உள்ள, பட்டப்படிப்பு படித்த, எளிய, துாய வாழ்வில் நாட்டமுடைய திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தியானம், தவம், ஜபம், சாஸ்திர ஆராய்ச்சிகளில் ஆர்வம் இருக்க வேண்டும். பயிற்சிக்கு பின் பிரம்மச்சர்யம் மற்றும் சந்நியாச தீட்சை அளிப்பது குறித்து, துறவியர் குழு ஆலோசனைக்குப் பின் பரிசீலிக்கப்படும். வாரத்தில் ஐந்து நாட்கள், தினமும் மூன்று மணி நேரம் வழங்கப்படும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். விரும்புவோர், தங்கள் முழு விபரம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியற்றின் நகல் மற்றும் புகைப்படத்தை இணைத்து, sriagas.gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி