உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆன்லைனில் மது பாட்டில் தேர்வு செய்து பணம் செலுத்தும் திட்டம் தொடக்கம்

 ஆன்லைனில் மது பாட்டில் தேர்வு செய்து பணம் செலுத்தும் திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, விரும்பிய மது வகையை தேர்வு செய்து, 'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்தி, கடைகளில் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை, 'டாஸ்மாக்' நிறுவனம் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று, ரொக்கப்பணம் அல்லது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் தான், மது வகைகளை வாங்க முடியும். கடைகளில் உள்ள மது வகைகள் விபரம் தெரிவதில்லை. இதனால், மது பிரியர்கள் விரும்பும் மதுவகைகளை, பணியாளர்கள் தருவதில்லை. மேலும் பணியாளர்கள் கூடுதலாகவும் பணம் கேட்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, 'www.tasmac.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக, மது பாட்டிலை தேர்வு செய்து, பணம் செலுத்தி, கடைகளில் வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இணையதள பக்கத்திற்கு சென்று, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான கடையை தேர்வு செய்யலாம். கடையில் அந்த சமயத்தில் உள்ள மது வகைகளின் பட்டியல் தெரிவிக்கப்படும். விரும்பிய மது வகைகளை தேர்வு செய்ய வேண்டும். பின், பெயர், மொபைல் போன் எண் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு முறை பதிவிடப்படும் ரகசிய எண் வரும். அதை பதிவிட வேண்டும். பின், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான, 'கியூ.ஆர்' குறியீடு வரும். அதை மொபைல் போனில், 'ஸ்கேன்' செய்து, 'ஜிபே, போன்பே, பீம்' உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். பணத்தை செலுத்தியதும், ஆன்லைன் ஒப்புகை ரசீது உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பின், பதிவு செய்த நாளில் மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை, மது கடைக்கு சென்று, 'கியூ.ஆர்' குறியீட்டை பணியாளர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள், 'ஸ்கேன்' செய்து, மது பாட்டிலை வழங்குவர். இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதளத்தில் பதிவு செய்த நாளிலேயே, கடை செயல்படும் நேரத்திற்குள் மது வாங்க வேண்டும். அதே நாளில் வாங்க தவறினால், கடை நேரம் முடிவடைந்ததும், 'ஆர்டர்' தானாகவே ரத்து செய்யப்படும். வாடிக்கையாளர் செலுத்திய தொகையில், 10 ரூபாய் கழிக்கப்பட்டு, மீதி தொகை செலுத்திய கணக்கிற்கே திரும்ப அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளத்தில்

புகார் அளிக்க வசதி

'ஆன்லைன்' மது விற்பனைக்காக, டாஸ்மாக் இணையதளம் முழுதுமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை பணியாளர்கள் தொடர்பாக வாடிக்கையாளர்கள், 1800 4252015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 73977 20230 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் புகார் அளிக்கலாம். இது தவிர, இணையதளத்திலும் புகார் அளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை