8 மணல் குவாரிகள் திறப்பது ஒப்பந்ததாரர்களால் இழுபறி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், எட்டு இடங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறப்பது, ஒப்பந்ததாரர்களால் தாமதமாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் நீர்வளத்துறை சார்பில், ஆற்றுமணல் குவாரிகள் இயங்கி வந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை சோதனைக்கு பின் குவாரிகள் மூடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மணல் குவாரிகள் முறையாக இயங்கவில்லை. இந்நிலையில், 30க்கும் அதிகமான இடங்களில், மணல் இருப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. ஆனால், யார்டுக்கு மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் தேர்வில் பிரச்னை ஏற்பட்டதால், குவாரி திறப்பு முடங்கியது. இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த கோரிக்கை அடிப்படையில், புதிய குவாரிகள் திறக்க, நீர்வளத்துறை முடிவு செய்தது. இதன்படி, புதுக்கோட்டையில், 3; கடலுாரில், 2; தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என, மொத்தம் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில், நவ., 1 முதல் மணல் குவாரிகள் இயங்கும் என, நீர்வளத்துறை அறிவித்தது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எட்டு இடங்களில், புதிதாக குவாரிகள் திறக்கும் நிலையில், அதில் மணல் அள்ளிப்போடும் ஒப்பந்தம் யாருக்கு என்பதில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. துறை சார்பில், புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டாலும், பழைய ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்னும் ரத்து செய்யப்படவில்லை. பழைய ஒப்பந்ததாரருடைய ஆட்களின் அச்சுறுத்தல் காரணமாக, புதிய ஒப்பந்ததாரர்கள், குவாரிகளில் மணல் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்டபடி புதிய மணல் குவாரிகள் திறப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. பழைய ஒப்பந்ததாரர் அனுமதியை ரத்து செய்வது குறித்து, துறை அமைச்சரிடம் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.