உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடை செய்யப்பட்ட நிம்சுலைடு மருந்து விற்பனையை தடுக்க உத்தரவு

தடை செய்யப்பட்ட நிம்சுலைடு மருந்து விற்பனையை தடுக்க உத்தரவு

சென்னை:வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும், 'நிம்சுலைடு' மருந்து தடை செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடக்கிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.கால் வலி, மூட்டு வலி, காது மூக்கு தொண்டை வலி, தீவிர காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்கு, நிம்சுலைடு மருந்து பயன்படுத்தப்படுகிறது.

பக்கவிளைவு

இது வலி நிவாரணியாக செயல்பட்டாலும், எதிர்விளைவுகள் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தலைவலி, வயிற்றுப் போக்கு, ரத்தம் உறைதல், பார்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு என, பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இம்மருந்தை தடை செய்தன. இந்தியாவில் நிம்சுலைடு மருந்து, கால்நடைகளுக்கான மருத்துவ பயன்பாட்டில் இருந்தது. அதை மனித பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இம்மருந்து பயன்பாட்டுக்கு, நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டது.

அறிவுறுத்தல்

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்ட விரோதமாக நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும், நிம்சுலைடு மருந்து விற்பனை நடக்கிறதா என கண்காணிக்கப்பட்டு வருவதாக, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை