உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயற்கை விளைபொருள் சந்தை சென்னையில் மாதந்தோறும் நடத்த முடிவு

இயற்கை விளைபொருள் சந்தை சென்னையில் மாதந்தோறும் நடத்த முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக இயற்கை வேளாண் கூட்டமைப்பு என்ற தன்னார்வலர் அமைப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்துவது, அவற்றின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை செய்கிறது.இந்த அமைப்பானது நேற்று, சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில், 'சென்னை ஆர்கானிக் மார்க்கெட்' என்ற பெயரில் சந்தையை நடத்தியது.இதை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்த ஷீலா நாயர், இயற்கை விவசாயிகளான அனந்து, ஜெயச்சந்திரன், இயற்கை விவசாய பயிற்சியாளர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். சந்தையில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, வாசனை சீரக சம்பா, ரத்தகாளி, குள்ளகாளி உள்ளிட்ட நாட்டு ரக அரிசி வகைகளையும், குதிரைவாலி, திணை, ராகி, சாமை, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களையும் அதிகம் பேர் வாங்கிச் சென்றனர்.இயற்கை விவசாயம் வாயிலான விதைகளும் விற்பனைக்கு வந்திருந்தன.சென்னையில் மாடித்தோட்டம் செய்வோர், முருங்கை, பருப்பு, பாலக் உள்ளிட்ட கீரை வகைகள், கொத்தவரை, கொடி அவரை, பாகற்காய், செடி காராமணி, நாட்டு தக்காளி, முள்ளங்கி, வெண்டை, உள்ளிட்ட காய்கறி விதைகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், துணி, காகித பை, கண்ணாடி பாட்டில், எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து வந்தோருக்கு மட்டுமே பொருட்கள் விற்கப்பட்டன.காகிதம், துணியாலான பைகளை விற்பனையாளர்கள் வைத்திருந்தனர். மேலும், கொட்டாங்குச்சி, பனை, தென்னை ஓலையால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், இயற்கை பருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட நுாலில், கையால் நெய்யப்பட்ட ஆடைகள் உள்ளிட்டவையும் பார்வையாளர்களை கவர்ந்தன.சிறுதானியங்களில் செய்யப்பட்ட தின்பண்டங்களும் இங்கு விற்கப்பட்டன. மூலிகை டீ, ஜூஸ், பனை வெல்ல ஐஸ்கிரீம், நுங்கு ஹல்வா, பனங்கிழங்கு லட்டு, கவுனி பாயசம், ராகி புட்டிங், பூங்கர் அரிசி காரக்கொழுக்கட்டை, முந்திரி ரிப்பன் பகோடா, ராஜ்முதி அதிரசம், காஜூ பர்பி உள்ளிட்ட தின்பண்டங்களை குழந்தைகள் விரும்பி உண்டனர்.இதுகுறித்து, இயற்கை விவசாயி அனந்து கூறுகையில், ''இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், விற்பனை சந்தைகளை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, இங்கு இந்த சந்தை நடத்தப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும், பயனாளிகளுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும்,'' என்றார்.வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா கூறுகையில், ''இங்குள்ள ஸ்டால்களில் விற்பனைக்கு வந்துள்ள அனைத்து தின்பண்டங்களிலும், இயற்கை விளைபொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன.''இதுபோன்ற சந்தைகளை மற்ற நகரங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mr Krish Tamilnadu
ஆக 05, 2024 11:04

நமது இந்திய முறைகள் அனைத்துமே, ஆழ்ந்த உள் அர்த்தத்துடன் கூடியவை. கடவுள் வழிபாடு, ஜோதிடம், வாழ்க்கை முறை என அனைத்தும் நமது வாழ்வியலுக்கு ஏற்ப தீர்மானிக்க பட்டவை. நமது முறைகள் நம்மிடையே உயிர்த்து எழுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன பொருட்கள், தொழில்நுட்பம் மற்றவர் அறியாத முறையில் தயாரிக்கப்படுகிறது. அவர்கள் புத்திசாலி என்கிறோம். அதே முறை தான், நமது இந்திய முறைகள் ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு சூட்சமம் என கூறின. பதில் கிடைக்காதவர்கள், மூட நம்பிக்கை என நமது முறைகள் விட்டு விலக ஆரம்பித்து விட்டன. சீன பொருட்கள் இன்று புத்திசாலிதனமாக தயாரிக்க படுகிறது என்றால், நமது முறைகள் அன்றே புத்திசாலி தனமாக மறைக்கப்பட்டன, சாமானியவர்களிடம் இருந்து. நமது முறைகளில் பொதிந்து இருக்கும் அறிவியலை, நாம் தான் கண்டு உணர வேண்டும்.


Rengaraj
ஆக 05, 2024 10:25

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் இதை நடத்த வேண்டும். இதெற்கென உள்கட்டமைப்புடன் கூடிய அரங்கு மற்றும் திறந்தவெளி மைதானம் கொண்ட ஒரு இடத்தை தனியார் பங்களிப்போடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிறுவ வேண்டும். இந்த விற்பனை அரங்குகள் வார சந்தை போன்று அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் செயல்படுமாறு இருந்தால் மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.


S. Narayanan
ஆக 05, 2024 09:04

அரசியல் கலப்பு இல்லாமல் நடக்குமா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை