உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நெல் கொள்முதல் நிலைய முறைகேடு: ஐகோர்ட் கெடு

 நெல் கொள்முதல் நிலைய முறைகேடு: ஐகோர்ட் கெடு

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம் பறிக்கும் இடைத்தரகர்களுக்கு எதிராக தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, கூட்டுறவு துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏ.வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தற்போது பின்பற்றப்படும், 'டோக்கன்' நடைமுறையை நீக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அணுகும் விவசாயிகளிடம், இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக பதிவு செய்து டோக்கன் பெற, ஏதுவான நடைமுறை உருவாக்குவதுடன், 'சிசிடிவி கேமரா' பொருத்தி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'சட்டவிரோதமாக பணம் கேட்டு , இடைத்தரகர்களால் விவசாயிகள் துன்புறுத்தப் படுவது குறித்து, 2025 செப்., மாதம் புகார் அளித்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. போலீசார் தரப்பில், 'இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை' என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'இந்த விவகாரம் தொடர்பாக, மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 'அந்த மனுவை, கூட்டுறவு துறை செயலர், நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஆகியோர், இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !