நகராட்சி கடைகளை இடிக்க முடிவு: பழனிசாமி கண்டனம்
சென்னை : 'குன்னுாரில் நகராட்சி கடைகளின், வாடகை கட்டணத்தை உயர்த்தியதுடன், கடைகளை காலி செய்ய வலியுறுத்தும், தி.மு.க., அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமாக, 800 கடைகள் உள்ளன. வாடகை உயர்வு
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அங்கு பிரசாரம் செய்த ஸ்டாலின், குன்னுார் நகராட்சி கடைகளுக்கு வாடகை உயர்த்தப் படாது என, உறுதி அளித்தார். ஆனால், வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நகராட்சி கடைகளுக்கு, தி.மு.க., அரசு, 2 ஆண்டுகளுக்கு முன்பே வாடகையை உயர்த்தியது.தற்போது, அந்த கடைகளை இடிக்கப் போகிறோம். எனவே, காலி செய்யுங்கள் என, வியாபாரிகளை வற்புறுத்துகின்றனர். இதனால், 800 வியாபாரிகளின் குடும்பங்களும், அக்கடைகளில் பணிபுரியும், 2,000க்கும் அதிகமான பணியாளர்களின் குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக, வியாபாரிகளை நம்பி வாழ்க்கை நடத்தும், நுாற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தருவதாக கூறும் மாற்று இடம், ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. எனவே, வியாபாரிகள் தி.மு.க., அரசின் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். ஆர்ப்பாட்டம்
குன்னுார் நகராட்சி, கடைகளை இடிக்கும் முடிவை உடனே கைவிட்டு, தொடர்ந்து வியாபாரிகளை பழைய இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட குன்னுார் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அப்பகுதி மக்களின் ஆதரவுடன், அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.