உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பிரசாரத்தில் த.வெ.க., கொடி பிள்ளையார் சுழி என பழனிசாமி பெருமிதம்

அ.தி.மு.க., பிரசாரத்தில் த.வெ.க., கொடி பிள்ளையார் சுழி என பழனிசாமி பெருமிதம்

சென்னை: அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில் த.வெ.க., கொடிகளைப் பார்த்ததும் உற்சாகமடைந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கூட்டணிக்கான 'பிள்ளையார் சுழி' என பெருமிதத்துடன் கூறினார்.சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பிரசார பயணத்தை பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் சிலர் த.வெ.க., கொடிகளுடன் நின்றிருந்தனர். அதை கண்டதும் உற்சாகம் அடைந்த பழனிசாமி, 'கூட்டணிக்கான பிள்ளையார் சுழி' என தெரிவித்தார்.

கொடி பறக்குது

கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., கூட்டணி வலுவான கூட்டணி என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்; அது வெற்று கூட்டணி. ஆனால், அ.தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணி, வலுவான கூட்டணியாக இருக்கும். அங்கே பாருங்கள், கொடி பறக்குது; பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். குமாரபாளையம் கூட்டத்தின் எழுச்சி ஆரவாரம், ஸ்டாலின் செவிகளை கிழிக்கும். தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தங்கம் விலை நிலவரம் போல, தினமும் கொலை எண்ணிக்கை நிலவரத்தை அறிவிக்கின்றனர். கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில், இரவோடு இரவாக ஸ்டாலின் போகிறார்; குழு அமைக்கிறார்; வேகமாக விசாரிக்கிறார். ஆனால், கிட்னி முறைகேட்டை ஏன் இந்த வேகத்தில் விசாரிக்கவில்லை. கரூர் சம்பவத்துக்கு ஒரு நியாயம்; தி.மு.க., கட்சியினர் தொடர்புடைய முறைகேட்டுக்கு ஒரு நியாயமா? இவ்வாறு அவர் பேசினார்.சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், விஜய் தலைமையிலான த.வெ.க.,வை சேர்க்க பழனிசாமியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முயற்சித்து வருகின்றனர். கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது, விஜயுடன் தொலைபேசியில் அமித் ஷா பேசியதாக செய்திகள் வெளியாகின.ஆனாலும், விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. அதே நேரத்தில், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைந்தால், தங்கள் வெற்றிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என தி.மு.க., நினைக்கிறது. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

நாடகம்

இந்நிலையில், குமாரபாளையம் கூட்டத்தில், த.வெ.க., கொடிகளைப் பார்த்ததும், உற்சாகம் அடைந்த பழனிசாமி, 'பிள்ளையார் சுழி போட்டு விட்டனர்' என பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ''வரும் தேர்தலில், வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவராக விஜய் இருப்பார். எனவே, விஜய் வந்தால், தி.மு.க.,வை எளிதாக வீழ்த்தலாம் என அமித் ஷாவும், பழனிசாமியும் நினைக்கின்றனர்.''விஜயிடம் இருந்து சாதகமான பதில் வராமல், பிள்ளையார் சுழி போட்டு விட்டனர் என, பழனிசாமி பேசியிருக்க மாட்டார்,” என்றனர். ஆனால், குமாரபாளையத்தில் அ.தி.மு.க.,வினர்தான் த.வெ.க., கொடிகளுடன் பழனிசாமி கூட்டத்துக்கு வந்தனர் எனவும், இது அ.தி.மு.க., நடத்தும் நாடகம் எனவும் தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை