உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காகித வடிவில் பஸ்கள் எண்ணிக்கை; இதுவே கள எதார்த்தம் என பன்னீர் ஆவேசம்

காகித வடிவில் பஸ்கள் எண்ணிக்கை; இதுவே கள எதார்த்தம் என பன்னீர் ஆவேசம்

சென்னை : 'மக்களின் தேவைகளுக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பஸ்கள் எண்ணிக்கை என்பது, காகித வடிவில்தான் இருக்கிறது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., அரசு இதுவரை ஐந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் 8,500 பஸ்கள் புதிதாக வாங்கப்படும் என, தி.மு.க., அரசு அறிவித்தது. அதில் கால்பகுதி பஸ்கள் கூட வாங்கப்படவில்லை. உதாரணமாக, தாம்பரத்தில் இருந்து, மண்ணிவாக்கம், முடிச்சூர், வண்டலுார் போன்ற பகுதிகளுக்கு, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை, 12 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் மூன்று பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுதும் இதே நிலைதான். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் போன்றவை காரணமாக, பயண நேரம் அதிகமாகி விட்டதாகவும், புதிதாக 1,500 கூடுதல் பஸ்களை வாங்க இருப்பதாகவும், போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர்.இதிலிருந்து, மக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுவதில்லை மற்றும் புதிய பஸ்கள் பட்ஜெட்டில் சொன்னதற்கேற்ப வாங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக அவதிப்படுவோர் ஏழை மக்கள்தான். மொத்தத்தில், தமிழகத்தில் பஸ்கள் இயங்கும் எண்ணிக்கை, காகித வடிவில்தான் இருக்கிறது என்பதை, கள எதார்த்தம் சுட்டிக்காட்டுகிறது.எனவே, முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட, புதிய பஸ்கள் குறித்த புள்ளி விபரங்களை தெரிவிக்க வேண்டும். தேவைக்கேற்ப புதிய பஸ்களை வாங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி