நவ.27ல் பன்னீர்செல்வம் அணி ஆலோசனை
சென்னை:அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைய முடியாத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு துவக்கி, அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்தார். 'அ.தி.மு.க.,வை விரைவில் ஒன்றிணைப்போம்' என்றார்.ஆனால் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியோ 'தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை' என, திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.இந்நிலையில், வரும் 27ம் தேதி காலை 10:30 மணிக்கு, சென்னை அசோகா ஹோட்டலில், தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தப்படும் என, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.