உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கன்வாடி மையங்களில் ஊழியர்கள் இல்லை; இந்த ஆண்டு 501 மையங்கள் மூடல்

அங்கன்வாடி மையங்களில் ஊழியர்கள் இல்லை; இந்த ஆண்டு 501 மையங்கள் மூடல்

சென்னை: தமிழகம் முழுதும், அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், இந்த ஆண்டு 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மொத்தம், 54,483 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது, முன்பருவக் கல்வி கற்பிப்பது, பெண்களின் நலனை கண்காணிப்பது போன்றவை இம்மையங்களின் நோக்கம். ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியர், ஒரு சமையலர் உண்டு. பலர் ஓய்வு பெற்றதால், தற்போது தமிழகம் முழுதும், 9,000 ஆசிரியர்கள் உட்பட 28,000 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2018 முதல், இம்மையங்களில் பணியாற்ற, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், ஒரு ஆசிரியர் பல மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், பெற்றோரும் தங்கள் குழந்தைகளை, அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயங்குகின்றனர். உதாரணமாக, சென்னை முகப்பேர் கண்ணதாசன் சாலையில் உள்ள அங்கன்வாடிக்கு, தினமும், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றன.இங்கு ஒரே ஆசிரியர் மட்டுமே உள்ளார். குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பது, கர்ப்பிணியரின் கையேடுகளை பாரமரிப்பது என, அனைத்து வேலைகளையும் அவரே செய்ய வேண்டி உள்ளது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது: தனியார் நடத்தும், 'ப்ளே ஸ்கூலில்' அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை, ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புகின்றனர். வசதி இல்லாதவர்கள், அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு ஊழியர் பற்றாக்குறையால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால், குழந்தைகளை அனுப்ப பலரும் தயங்குகின்றனர். ஏழை மாணவர்கள் நலன் கருதி, அங்கன்வாடி மையங்களுக்கு, போதிய ஊழியர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.https://x.com/dinamalarweb/status/1941322370935030143

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

இதுகுறித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், 54,483 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில், 1.04 லட்சம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது, 75,468 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; 28,532 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 3,886 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 7,842 பணியிடங்களை நிரப்ப அரசு முன்வந்துள்ளது. பல அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர் இல்லாததால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தனியார் நடத்தும், 'ப்ளே ஸ்கூலில்' சேர்க்கின்றனர். இதனால், நகரங்களில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும், சென்னையில் 147 உட்பட, 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து இயங்க, காலி பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

aaruthirumalai
ஜூலை 05, 2025 22:01

குழந்தையின் முகத்தை பாருங்க......


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 12:12

மத்திய அரசிடம் இதற்காக நிதி பெற்றுக் கொண்டு சரியாக நடத்தாதது மாநில அரசு. ஆனால் பழியை மத்திய அரசின் மீது போட்டு கட்சிப் பிரச்சாரம்.


நாஞ்சில் நாடோடி
ஜூலை 05, 2025 09:39

திராவிட மாடலின் சாதனை ...


raja
ஜூலை 05, 2025 08:49

பொது மக்கள் காரி உமிழும் வகையில் திராவிட மாடல் விடியல் அரசு நடக்கின்றது....


N Sasikumar Yadhav
ஜூலை 05, 2025 07:16

திராவிட மாடல் அரசு அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு அந்த இடங்களில் திமுக நிர்வாகிகள் தயாரிக்கிற சாராயத்தை விற்க திராவிட மாடல் அரசு சாராயக்கடைகளை திறந்து சேவை செய்யும் யாரும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் அரசு


Nada Rajan
ஜூலை 05, 2025 06:53

இதற்கு அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி