தத்கால் டிக்கெட் முன்பதிவு சர்வர் பிரச்னை தொடர்வதால் பயணியர் கடும் அவதி
சென்னை: 'தத்கால்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், அடிக்கடி, 'சர்வர்' பிரச்னை ஏற்படுவதால், பயணியர் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மக்களிடம் மொபைல்போன், கணினி பயன்பாடு அதிகரித்த நிலையில், இணையதளம், செயலி வழியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, 80 சதவீத்துக்கும் அதிகமானோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மீதமுள்ளோர் முன்பதிவு மையங்களில், 'டிக்கெட்' முன்பதிவு செய்கின்றனர். எனினும், 'சர்வர்' தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது: பயணியர் பயன்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலி உள்ளது. ஆனால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக, தத்கால் டிக்கெட் முன்பதிவின் போது, டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடைசி நேரத்தில், சில டிக்கெட் மட்டும் காட்டப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திடீரென முடங்கி விடுகிறது. இதனால், அவசரத்திற்கு டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட வேண்டி உள்ளது. சர்வரின் தரத்தை உயர்த்த, ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.