விரைவு ரயில்களில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணியர் வரவேற்பு
சென்னை:விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைப்பதற்கு, பயணியரிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு டிக்கெட் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல், முன்பதிவு பெட்டிகளில் சிலர் பயணித்து வருகின்றனர். இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி, ஏற்காடு, போடிநாயக்கனுார்; எழும்பூர் - திருநெல்வேலி, துாத்துக்குடி; தாம்பரம் - செங்கோட்டை உட்பட, 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல் லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. தெற்கு ரயில்வே பயணியர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: ரயில்களில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. இதனால், சாதாரண பயணியர், கடைசி நேரத்தில் ஊருக்கு செல்ல வசதியாக இருக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும், 150க்கும் மேற்பட்டோர் கூடுதலாக பயணிக்க முடிகிறது. தீபாவளியின் போது பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், போதிய காவலர்களை நியமனம் செய்து, ஒழுங்குப்படுத்தி அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து விரைவு ரயில்களிலும், நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க, வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் திட்டமிட்டுள்ள, 51 ஜோடி விரைவு ரயில்களில், இதுவரை, 32 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கி வருகிறோம். எஞ்சியுள்ள ரயில்களிலும், கூடுதல் பெட்டிகளை விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.