உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., மாஜியை ஆக.25 வரை கைது செய்ய கூடாது: ஐகோர்ட்

தி.மு.க., மாஜியை ஆக.25 வரை கைது செய்ய கூடாது: ஐகோர்ட்

மதுரை : திருச்சியில் ஓட்டல் காஞ்சனாவை அபகரிக்க முயன்ற வழக்கில் முன்ஜாமின் கோரிய தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட பத்து பேரது மனுவை ஆக., 25க்கு தள்ளிவைத்த மதுரை ஐகோர்ட் கிளை, அதுவரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டது. நாமக்கல் டாக்டர் கதிர்வேல். இவர் திருச்சி ஓட்டல் காஞ்சனா நிர்வாகத்தில் இருந்து சிலர் தூண்டுதல் பேரில் தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து கே.என்.நேரு, சகோதரர் ராமஜெயம், மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், ஓட்டல் நிர்வாகிகள் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமின் கோரி நேரு உட்பட பத்து பேர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நேரு சார்பில் வக்கீல்கள் அசோக்குமார், செந்தில்குமார் வாதாடினர். மற்றவர்கள் சார்பில் வாதங்களை எடுத்து வைக்க வேண்டி, விசாரணையை ஆக., 25க்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என போலீசாரை கேட்டு கொள்ள கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி கதிர்வேல் சார்பில் வக்கீல் ஜி.ஆர்.சுவாமிநாதன், மனு செய்தார். மனுவில், ''ஏற்கனவே என்னை நேரு, அவரது சகோதரர் ராமஜெயம் தூண்டுதல் பேரில் வெளியேற்ற முயற்சித்தனர். எனவே என்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்,'' என தெரிவிக்கப்பட்டது. இம்மனுவும் தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை