உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழாக்களில் ராட்சத ராட்டினம் இயக்க சுற்றுலா துறையின் அனுமதி அவசியம்

விழாக்களில் ராட்சத ராட்டினம் இயக்க சுற்றுலா துறையின் அனுமதி அவசியம்

சென்னை : கேளிக்கை பூங்கா மற்றும் திருவிழாக்களில், 'ராட்சத ராட்டினங்கள்' இயக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை: ராட்சத ராட்டினம் போன்ற கேளிக்கை சவாரிகள், பூங்காக்கள் மட்டுமின்றி, அரசு துறைகள் ஏற்பாடு செய்யும் விழாக்கள் மற்றும் கண்காட்சியிலும், கோவில் திருவிழாக்களிலும் இயக்கப்படுகின்றன. இவற்றை பாதுகாப்பான முறையில் இயக்க, பி.ஐ.எஸ்., எனும் 'இந்திய தர நிர்ணய கழகம்' பரிந்துரைத்துள்ள விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவது அவசியம். சமீபத்தில் ராட்சத ராட்டின விபத்துகள் நடந்துள்ளன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிரந்த அமைப்புகளில் உள்ள ராட்சத ராட்டினங்கள், 'இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்றிதழ்' பெற வேண்டியது அவசியம். தற்காலிக அமைப்புகளில் இயங்கும் ராட்டினங்களுக்கு, தீயணைப்பு, மின் துறை, நீர்வளத் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட, அரசு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், தற்காலிக அமைப்புகளில், குறைந்தபட்சம் 18 அடி முதல் 60 அடி வரை மட்டுமே, ராட்டினங்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றை இயக்குபவர், பாதுகாப்பு பரிசோதனை, இயந்திர பராமரிப்பு பணியாளர் பயிற்சி, பயணியர் பாதுகாப்பு, அவசரநிலை மேலாண்மை உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ராட்சத ராட்டினங்களை இயக்குவதற்கான அனுமதி விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து, சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்