வடமாவட்டங்களில் கூடுதலாக 50 ஏசி பஸ்கள் இயக்க திட்டம்
சென்னை:தமிழகத்தில் வடமாவட்டங்களில் இயக்கப்படும், 'ஏசி' பஸ்களுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், கூடுதலாக, 50 'ஏசி' பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தினமும், 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, புதுச்சேரி, திருச்சி, கடலுார், விருத்தாசலம், திருவண்ணாமலை, சேலம், திருப்பதி, கள்ளக்குறிச்சி, வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, சென்னை கிளாம்பாக்கம் - திருவண்ணாமலை, மாதவரம் - திருச்சி, கோயம்பேடு - திருப்பதி, கோயம்பேடு - காஞ்சிபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன், 50 'ஏசி' பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு, 'ஏசி' பஸ்களில் பயணிக்க பலரும் விரும்புகின்றனர். முதற்கட்டமாக துவங்கப்பட்ட, 50 'ஏசி' பஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு சர்வீஸ் செல்லும் போதும், 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஒரு கி.மீ., 1.30 ரூபாய் தான் கட்டணம் என்பதால், பயணியர் அதிகளவில் பயணிக்கின்றனர். எனவே கூடுதலாக, 50 'ஏசி' பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். சில புதிய வழித்தடங்களிலும், 'ஏசி' பஸ்கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.