வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Sticker pasting groups would be unhappy
வாழ்த்துக்கள்
'நம் இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா, சிம்பொனி இசையை இயற்றியது அவரது இசைப் பயணத்தில், மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது' என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.பிரபல இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், கடந்த, 8ம் தேதி, 'வேலியன்ட்' என்ற சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் வாயிலாக, மேற்கத்திய செவ்வியல் வடிவிலான சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, இளையராஜா நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்து அவர், 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. என் சிம்பொனி வேலியன்ட் உட்பட பல விஷயங்கள் பற்றி நாங்கள் பேசினோம். பிரதமரின் பாராட்டையும், ஆதரவையும் நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.இதேபோல, பிரதமர் மோடியும், இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:ராஜ்யசபா எம்.பி., இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இசைஞானியான அவரது மேதமை, நம் இசை மற்றும் கலாசாராத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் முன்னோடியாக திகழும் இளையராஜா, சமீபத்தில் லண்டனில் தன் சிம்பொனியான வேலியன்டை வழங்கி, மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது.- உலகளவில் தொடர்ந்து மேன்மையுடன் இளையராஜா விளங்குவதை இது எடுத்துக் காட்டுகிறது.இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்த இளையராஜாவை, ராஜ்யசபா எம்.பி.,க்கள் நேற்று, 27 முறை மேஜையை தட்டி பாராட்டினர். இதைத்தொடர்ந்து ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:கடந்த, 50 ஆண்டுகளாக, இந்திய சினிமா துறையை, தன் இசையின் வாயிலாக வடிவமைத்ததில், இளையராஜா பெரும் பங்காற்றி வருகிறார். சமீபத்தில், சிம்பொனி இசையை இயற்றிய முதல் இந்தியர் என்ற அவரது சாதனைக்கு, இந்த நாடே பெருமை கொள்கிறது. 34 நாட்களில், இந்த சிம்பொனி இசையை உருவாக்கியது யாரும் செய்ய முடியாத ஒன்று. இளையராஜாவின் இசை சகாப்தம், நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். வருங்கால தலைமுறையினரை ஊக்குவித்து, அவர்களுக்கு உந்து சக்தியாகவும், இளையராஜா திகழ்வார் என்பதில், பெருமிதம் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர் -
Sticker pasting groups would be unhappy
வாழ்த்துக்கள்