சட்டசபைக்குள் உட்கட்சி பிரச்னை வேண்டாம் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எச்சரிக்கை
சென்னை:''உட்கட்சி பிரச்னையை சபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்; ஒரே கட்சியை சேர்ந்த அனைவரையும் பேச அனுமதி முடியாது,'' என, பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும், கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் அன்புமணிக்கும், இருவர் ராமதாசிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராமதாஸ் அணியை சேர்ந்த ஜி.கே.மணியை, சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி, அன்புமணி கோஷ்டியினர், கடந்த 14ம் தேதி முதல் வலியுறுத்தி வருகின்றனர். சட்டசபையில் நேற்று, 'கோல்ட்டிரிப்' மருந்து தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ராமதாஸ் ஆதரவாளரான அருள் பேசினார். தங்களில் ஒருவருக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தனர்; அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து, திடீர் தர்ணா செய்தனர். இதனால், சபை நடவடிக்கைகள் தடைபட்டன. அப்போது, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே, விவாதத்தில் பங்கெடுத்து பேச முடியும். அனைவரையும் பேச அனுமதிக்க முடியாது. பா.ம.க.,வினர் உள்கட்சி பிரச்னையை சபைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் இருக்கைக்கு செல்லாவிட்டால், சட்டசபை விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களை அனுப்பி வெளியேற்றப்படுவர். இவ்வாறு சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து அன்புமணி ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.