| ADDED : ஜூலை 30, 2025 06:28 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட வடமாநில நபரை, நான்கு நாள் காவலில் விசாரிக்க, திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமி, கடந்த 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை, கடந்த 25ம் தேதி, போலீசார் கைது செய்தனர். கடந்த 26ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன், அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆக., 9ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை, ராஜு பிஸ்வகர்மாவை, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி உமா மகேஸ்வரியிடம் ஆரம்பாக்கம் போலீசார் மனு அளித்தனர். நேற்று பலத்த பாதுகாப்புடன் குற்றவாளியை ஆஜர்படுத்தினர். நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராஜு பிஸ்வகர்மாவை ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.