உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்றத்துடன் போலீசாருக்கு ஒருங்கிணைப்பு இல்லை; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் குட்டு

நீதிமன்றத்துடன் போலீசாருக்கு ஒருங்கிணைப்பு இல்லை; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'விசாரணை நீதிமன்றங்கள், காவல்துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லை' என, சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை காவல் நிலையங்களில், 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யவும், போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் வானமலை. இவருக்கு சென்னை நொளம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. குடியிருப்பு நலச்சங்க நிதியில், 1.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, இவர் அளித்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த தன்னை அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பாளர்களின், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் கருத்துக்கள் பதிவாவதாக, 2024 நவம்பர், 4ல், நொளம்பூர் போலீசில் வானமலை புகார் அளித்தார். டிச., 9ல் தேசிய பட்டியலின ஆணையத்திலும் புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் ஆஜராகி அறிக்கை தர, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் ஆஜரானார். மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''புகார்தாரர் கூறுவது போல, தேசிய பட்டியலின ஆணையத்தில் இருந்து, இ -- மெயில் வாயிலாக கூட எந்த உத்தரவும் வரவில்லை,'' என்றார்.இதையடுத்து, வானமலை மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.பின், நீதிபதி பி.வேல்முருகன் கூறியதாவது: குற்ற வழக்குகளை தீர்ப்பது தொடர்பாக காவல்துறை, நீதித்துறை பராமரிக்கும் தரவுகளுக்கு இடையே முரண்பாடுகள் உள்ளன. புகார்கள் மீது விசாரணை நடத்தி, அவற்றை முடித்து வைத்தால், அதுபற்றி நீதிமன்றங்களுக்கு அறிக்கைகள் அனுப்புவதில்லை.மாவட்ட முதன்மை நீதிபதிகள், எஸ்.பி.,க்கள் இடையே மாதாந்திர கூட்டங்களை நடத்தும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. விசாரணை நீதிமன்றங்கள், காவல்துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லை. எனவே, விசாரணை நீதிமன்றங்களுடன் போலீசார் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நீதிமன்றங்கள் ஒத்துழைக்கா விட்டால், அந்த விபரத்தை உரிய நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வழக்கு விசாரணைகளில் பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். சாதாரண குற்றவியல் வழக்கில் கூட, உரிய தீர்வை எட்ட பல ஆண்டுகள் காத்திருக்க நேரிடுகிறது. விரைவில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் கடந்த பிறகும், சட்டத்தின் ஆட்சி இல்லை. ஏராளமான குறைபாடுகள் உள்ளன.புலன் விசாரணை அதிகாரிகளை, பாதுகாப்பு பணிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அனுப்பக்கூடாது. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், அதில் கவனம் செலுத்தி, சரியான நேரத்தில் விசாரணையை முடிக்க அனுமதிக்க வேண்டும். சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில், 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை; எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன; எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது என்பன போன்ற விவரங்கள் குறித்து, ஜூலை 8க்குள், மாநகர போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி பி.வேல்முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

lana
ஜூன் 10, 2025 13:30

இந்த வக்கீல் ன்னு ஒரு குரூப் சுத்தி வருவார்கள். அவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள் ஆ. பெரும்பாலான cases முடியாமல் இருக்க காரணம் அரசு அலுவலகங்களில் இருந்து வழங்கப்பட்ட விபரத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசு வழக்கறிஞர் கள் தகுதி திறமை இல்லாத நிலையில் உள்ளது. எல்லாம் அரசியல் appointment. தகுதி திறமை எல்லாம் தேவை இல்லை. பிறகு எப்படி case முடியும்


V Venkatachalam
ஜூன் 10, 2025 12:39

ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் நீதிமன்றத்தை எப்படி ஏமாற்றலாம் என்பதில் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பில் இருக்கிறார்கள் என்பது இப்போது ஞானசேகரன் கேஸில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. யாரை அவசியமா விசாரித்து இருக்கணுமோ அவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வராமல் இருக்க எவ்வளவு தில்லு முல்லு செய்யணுமோ அத்தனையும் செய்து சாதிச்சிட்டாங்களே அது ஆணியில் இருந்து அவியல் வரைக்கும் ஒருங்கிணைப்பு தானே.


jss
ஜூன் 10, 2025 11:03

ஒன்றுமே பாக்கியில்லை. எல்லா எப்ஐஆரும் வாபஸ் பெறப்பட்டன. தமிழகம் அமைதி பூங்கா. கேஸகள் இல்லாத்தனால் நிதிமன்றமும் நீதியரசர்களும் தேவையில்லை. திராவிட மாடலா கொக்கா??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 10, 2025 08:29

எதனுடன் யாருக்கு ஒருங்கிணைப்பு இருக்கிறதோ இல்லையோ நீதியுடன் நீதிபதிகளுக்கு ஒருங்கிணைப்பு இருந்தாகவேண்டும் ..... அது இல்லை என்று பல வருடங்களாகவே பல நீதிபதிகள் உணர்த்திக்கொண்டு வருகிறார்கள் .....


rama adhavan
ஜூன் 10, 2025 07:29

அரசியல்வாதிகளிடம், சமூக விரோதிகளிடம் மட்டுமே மிக நெருங்கிய ஒருங்கிணைப்பு நல்லமுறையில் நீண்ட காலமாக உள்ளது. மற்றபடி பொதுமக்கள் எல்லாம் துசிதான் மை லார்ட்.


Mani . V
ஜூன் 10, 2025 04:04

ஆனாலும், இருவருக்கும் முதலாளி கோபாலபுரம் குடும்பம்தான்.


Kasimani Baskaran
ஜூன் 10, 2025 03:57

போலீஸ் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது என்பது கூட புரியாமல் இவர்கள் செய்யும் அலப்பறை அதிசயிக்க வைக்கிறது.


முக்கிய வீடியோ