| ADDED : செப் 20, 2011 11:46 PM
பழையனூர்: சிவகங்கை மாவட்டம் பழையனூர் அருகே வைரக்கல் இருப்பதாக கூறி, வாங்க வருவோரிடம் வழிப்பறி செய்து, இதுவரை பல லட்சங்களை மோசடி செய்த கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். பழையனூர் அருகே தாழிக்குளம் ஈஸ்வரன் என்பவர் 'பாம்பு கக்கிய வைரக்கல்' இருப்பதாகவும், பலகோடி மதிப்புள்ள இது சில லட்சங்களுக்கு கிடைப்பதாகவும் புரோக்கர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை வாங்குவதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து பலர் வருவதும், அவர்களிடம் வழிப்பறி செய்வதும் தொடர்ந்தது. இம்முறை திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர்களே சிலர் கூட்டணி அமைத்து இந்தக்கல்லை வாங்க திட்டமிட்டு கடந்த 1ந்தேதி சென்றனர். பழையனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே சந்தவழியான் கோயிலில் நடந்த பேரத்தின் போது, ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் வழிப்பறி செய்தது. ரூபாய் 15 லட்சத்தை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதுபோன்று பலமுறை நடந்த வழிப்பறியில் வெளி மாவட்ட, மாநிலத்தினர் பல லட்ச ரூபாய் இழந்த கதை தெரிந்து போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். இருவாரமாகியும் கும்பலை பிடிக்கமுடியாமல் திணறும் போலீசார், வழக்குப்பதியாமல் மவுனம் காப்பதால், பணத்தை பறிகொடுத்தவர்கள் பதட்டத்தில் உள்ளனர்.