கோவில் காவலாளியை போலீஸ் அடித்து கொன்ற வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
காவல் துறை அராஜகத்தால் நடந்த கொலை
அஜித்குமார் மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: திருப்புவனம் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில், உச்சந்தலை முதல் கால்கள் வரை, 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க, தி.மு.க., அரசின் காவல் துறை அராஜகத்தால் நடந்த கொலை. தி.மு.க., ஆட்சியில் நடந்த, 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.இந்நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு வலிப்பு காரணம் என, காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. விக்னேஷ், 'லாக்கப்' மரணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின், எந்த பச்சைப்பொய்யை சட்டசபையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது, தி.மு.க., அரசின் காவல் துறை.பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில், பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழக மக்கள். காவல் துறையினரின் போலி எப்.ஐ.ஆர்., மீது, மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்று, பதிலளிக்க வேண்டும். 'வீடியோ ஷூட்' செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின்? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
* அன்புமணி: அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், குற்றவாளிகளை காப்பாற்ற காவல் துறையும், தமிழக அரசும் முயன்று வரும் சூழலில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரித்தாலும் நீதி கிடைக்காது. எனவே, சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு போல, இந்த வழக்கையும் சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.* முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: விசாரணை என்ற பெயரில் உயிரிழக்கும் அளவுக்கு கொடூர தாக்குதல் நடத்துவது, சட்டத்திற்கு புறம்பான செயல். தி.மு.க., ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் நிலைய மரணங்களைப் பார்க்கும் போது, காவல் துறை, முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐகோர்ட் கண்காணிப்பில் விசாரணை@
@
த.வெ.க., தலைவர் விஜய்:சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை நடந்து கொள்கிறது என்பதை, இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நான்கு ஆண்டுகளில், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கையை, தமிழக உள்துறை உடனடியாக வெளியிட வேண்டும். அஜித்குமார் வழக்கில் காவல் துறையினர், கொலை குற்றவாளிகள் என்பதால், தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயமாக நடக்காது. உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி, நீதியை நிலைநாட்ட வேண்டும்.இத்தகையை கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடக்காது என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
'அப்பாவின் ஆட்சியில்
கொல்லப்படும் அப்பாவிகள்'
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:சாத்தான்குளம் தந்தை, மகனை, காவல் துறை விசாரணையில் படுகொலை செய்தபோது கொதித்து கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின், அவரது கட்டுப்பாட்டில் காவல் துறை வைத்திருந்தும், அஜித்குமார் கொல்லப்பட்டது ஏன்?'ஜெய்பீம்' படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு, அவரது ஆட்சியில் நடக்கும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
மனித உரிமை ஆணையத்துக்குநயினார் கடிதம்
சிவகங்கை மாவட்டத்தில், போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை, நேரடி கண்காணிப்பில் உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்குமாறு, டில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 'கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும். காவல் துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.