உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 சுகாதார நிலையங்களில் பாலி கிளினிக் துவக்கம்

25 சுகாதார நிலையங்களில் பாலி கிளினிக் துவக்கம்

சென்னை:தமிழகத்தில் கூடுதலாக, 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களில், 'பாலி கிளினிக்' என்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.சென்னை, ஆவடி, திருமுல்லைவாயில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட, 25 இடங்களில், மாலை நேர சிறப்பு மருத்துவ மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அத்துடன், திருவள்ளூர் மாவட்டத்தில், 11.85 கோடி ரூபாயில், புதிய மருத்துவ கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் ஏற்கனவே, 108 இடங்களில் சிறப்பு மருத்துவ மையம் செயல்படுகிறது. சட்டசபை அறிவிப்பின்படி கூடுதலாக, 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், நகர்ப்புற சிறப்பு மருத்துவ மையம் துவக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை, 4:30 முதல் இரவு 8:30 மணி வரை, சிறப்பு சிகிச்சை மையம் செயல்படும். இதில், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம் என, எட்டு வகையான சிகிச்சைகள் பெறலாம். அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை, அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. நாமக்கல் சிறுநீரக திருட்டு தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது. உடல் உறுப்புகள் தானத்தில், தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதை செலுத்தி, அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. பொதுமக்களிடம் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !