| ADDED : ஏப் 23, 2025 04:29 AM
மதுரை: 'கிளை தபால் நிலையங்களை ஒருங்கிணைக்கும் (இண்டிபெண்டெண்ட் டெலிவரி சென்டர்) நடவடிக்கைக்கு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட தலைமை தபால் நிலையங்களும், அதன் கீழ் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை தபால் நிலையங்களும் உள்ளன. இத்துறையில் தனியார் வருகைக்குப் பின், இவற்றின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு தபால் நிலையங்கள், ஆர்.எம்.எஸ்., நிலையங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஏற்பாடு செய்கிறது. இதற்கான நடவடிக்கைகள் சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் துவங்கிவிட்டன. இதனால் கீழ்மட்ட அளவில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.தபால் துறையில் இயங்கும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு என்ற ('என்.எப்.பி.இ.,) அமைப்பின் கீழ் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட் மேன்கள், மல்டி டாஸ்க் ஸ்டாப் (எம்.டி.எஸ்.,) எனும் பல்திறன் ஊழியர்களும் உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தபால் ஊழியர்கள் கூறுகையில்,''சிறிய தபால் அலுவலகங்களை பெரிய அலுவலகங்களுடன் ஒருங்கிணைக்கும் பணியை துவக்குவதால் பாதிக்கப்படுவோம். இலக்கு நிர்ணயித்து பொதுமக்களிடம் சேமிப்பு கணக்குகளை துவக்கும்படி கூறுகின்றனர். வங்கிகளில் பலர் கணக்குகளை துவக்கிவிட்டதால், பொதுமக்கள் கணக்கு துவக்குவதில் தீவிரம் காட்டததால், மனஉளைச்சல் ஏற்படுகிறது'' என்றனர். இதனால் மாநில அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட பொருளாளர் திருப்பதி கூறுகையில் ''தபால் நிலைய ஒருங்கிணைப்பால் போஸ்ட் மேன், எம்.டி.எஸ்., ஊழியர்கள் பாதிக்கப்படுவர். தற்போது ஒரு போஸ்ட் மேன் 20 கி.மீ., வரை சென்று பட்டுவாடா செய்கிறார் என்றால் ஒருங்கிணைப்பால் 35 கி.மீ., வரை சென்றுவர வேண்டும். ஆட்குறைப்புக்காக இத்தகைய நடவடிக்கையை எடுக்கின்றனர். இந்நடவடிக்கையை கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும்'' என்றார்.