வேலூர்: வேலூரில் அமைச்சர் பங்கேற்ற விழாவுக்காக, தடை செய்யப்பட்ட பகுதியில் மின் வினியோகம் செய்ததில், மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்; மக்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்ஷா, ஸ்ரீதர். இவர்கள் மூன்று பேரும், ராணிப்பேட்டையைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் வாசு என்பவரிடம் பணிபுரிந்து வந்தனர்.வேலூர் அரசு மருத்துவமனை பகுதியில், நேற்று, மின் பராமரிப்புப் பணிக்காக, மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில், வாசு உள்ளிட்ட மற்ற மூன்று தொழிலாளர்களும், பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு, மருத்துவமனை வளாகத்தில், புதிய ஜெனரேட்டர் அறை திறப்பு விழா நடந்தது. இதில், அமைச்சர் விஜய் பங்கேற்றார். இதற்காக, மின் வாரிய அதிகாரிகள் மருத்துவமனைக்கு மின் வினியோகம் செய்தனர். அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சென்ற பின்னும், மின் வினியோகம் தொடர்ந்தது. மதியம் 12.30 மணி அளவில், டிரான்ஸ்பார்மரில் மின் வினியோகம் இருப்பது தெரியாமல், வாசு மற்றும் மூன்று தொழிலாளர்கள் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, மின்சாரம் பாய்ந்து சசிகுமார், பாட்ஷா, ஸ்ரீதர், வாசு ஆகியோர், தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயம் அடைந்த நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதில், பாட்ஷா பரிதாபமாக இறந்தார். மற்ற மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.