அ.தி.மு.க.,வினருக்கு பிபி சபாநாயகர் அப்பாவு கிண்டல்
சென்னை:கையில் கருப்பு பட்டை அணிந்து சபைக்கு வந்த அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் அப்பாவு கிண்டல் செய்தார். கரூர் உயிர்பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கொறடா உத்தரவு என்பதால், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ., செங்கோட்டையனும் கருப்பு பட்டையுடன் அமர்ந்திருந்தார். மருத்துவமனைகளில் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் கருவியில் உள்ளது போன்று, கருப்பு நிறத்தில் அந்த பட்டை இருந்தது. அதை கவனித்த சபாநாயகர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ரத்தக் கொதிப்பா என்பதை குறிப்பிடும் வகையில், ஆங்கிலத்தில் 'பிபி'யா என கேட்டார். கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, ''சிறை கைதிகளுக்கு கருப்பு பட்டை வழங்கப்படும். அதேபோல், அ.தி.மு.க.,வினர் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்,'' என கிண்டல் அடித்தார். சபாநாயகர் அப்பாவு கிண்டலுக்கு பதிலளித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சட்டசபையில் நான் பேச எழுந்தாலே பதறும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம்போல வெற்றுச்சுவரைப் பார்த்து, வெட்டி வசனம் பேசியிருக்கிறார்; தி.மு.க., அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறியதாக கூறியிருக்கிறார். கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும், கருப்பு பட்டை அணிந்து வந்தோம். அதையும் கிண்டல் செய்யும் தொனியில், உங்கள் சபாநாயகரும், அமைச்சரும் மிக கேவலமாக பேசினர். சபாநாயகரோ, கருப்பு பட்டையைப் பார்த்து, 'ரத்தக் கொதிப்பா?' என்று கேட்கிறார். இப்போது சொல்கிறேன், ரத்தக் கொதிப்பு தான். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால், 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல், தி.மு.க., அரசு அரசியல் செய்கிறதே என்ற ரத்தக் கொதிப்பில் தான் கருப்பு பட்டை அணிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.