கைதிகளின் பொருளுக்கு போலி ரசீது சிறை அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு
சென்னை:கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு போலி ரசீது தயார் செய்து, 1.64 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, மதுரை மத்திய சிறை உட்பட, 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி என, ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. அங்கு கைதிகள் வாயிலாக, எழுது பொருட்கள், கையுறை, அலுவலக கோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முறைகேடு
கைதிகள் வாயிலாக தயாரிக்கப்படும் அலுவலக கோப்புகள், 'பேண்டேஜ்' துணி உள்ளிட்ட மருத்துவ பொருட்களை, அரசு துறைகள், நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு சிறைத்துறை வழங்க வேண்டும். அந்த துறைகள் தேவையில்லை என்றால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு விற்பனை செய்யலாம் என்பது, அரசு வகுத்துள்ள விதி. மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனை விவகாரத்தில், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிற மத்திய சிறைகளிலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, மாநில தணிக்கை துறையும் சுட்டிக்காட்டி உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக, மதுரை மத்திய சிறை கைதிகள் வாயிலாக எழுது பொருட்கள், அலுவலக கோப்புகள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதாகவும், அந்த பொருட்களை அரசு அலுவலகங்களுக்கு விற்பனை செய்ததாகவும், போலி ரசீதுகள் தயாரித்து, 1.64 கோடி ரூபாய் முறைகேடு நடந்துஉள்ளதை கண்டறிந்து உள்ளனர். இது தொடர்பாக, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தவரும், தற்போது கடலுார் மத்திய சிறையில் அதே பொறுப்பில் இருப்பவருமான ஊர்மிளா, 39, உள்ளிட்ட, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், சென்னை, மதுரை, வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தேனி என, ஆறு மாவட்டங்களில், 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று காலை 6:30 மணியில் இருந்து, பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர். மதுரை மத்திய சிறையிலும் சோதனை நடந்தது. அதேபோல, மதுரை மத்திய சிறையில் ஜெயிலராக பணிபுரிந்து, தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரியும் வசந்தா கண்ணன், 36 என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை
மதுரை மத்திய சிறை முன்னாள் நிர்வாகப் பிரிவு அதிகாரியும், தற்போது வேலுார் மத்திய சிறையில், அதே பொறுப்பில் உள்ளவருமான தியாகராஜன் வீடு, மதுரை கிழக்கு மாசி தெருவில் உள்ள ஜே.கே.டிரேடர்ஸ் உரிமையாளர் ஜபருல்லாகான், அவரது மகன் முகமது அன்சாரி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.மேலும், சென்னை மண்ணடியில் ஜபருல்லாகான் மகன் முகமது அலி, கொடுங்கையூர் எஸ்.எஸ்.டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் சீனிவாசன், அவரது மனைவி சாந்தி, திருநெல்வேலி பாளையங்கோட்டை தொழில் அதிபர் சங்கரசுப்பு, அவரது மனைவி தனலட்சுமி, மகள் வெங்கடேஷ்வரி ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.