திருச்சியில் சிறைத்துறை டி.ஜி.பி., ஆய்வு
திருச்சி: திருச்சி மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில், சிறைவாசிகளிடம் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர், குறைகளை கேட்டறிந்தார். தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர், நேற்று முன்தினம், திருச்சி மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில், சமையலறையை ஆய்வு செய்த அவர், உணவுப்பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின் சிறை வளாகத்தில் செயல்படும் ஐ.டி.ஐ.,யில் ஆய்வு மேற்கொண்டார். ஐ.டி.ஐ., தேர்வில், 600க்கு, 600 மார்க் எடுத்த, மூன்று சிறைவாசிகளை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். பின், சிறை முழுதும் சுற்றிப்பார்த்த டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர், சிறைவாசிகளிடம் குறைகளையும், தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின், சிறைவாசிகளால் பராமரிக்கப்படும் காய்கறி தோட்டத்தையும் பார்வையிட்டார். பின்னர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறப்பு சிறைக்கு சென்று, அங்கு தாயுடன் சிறையில் வசிக்கும் குழந்தைகளுக்கான காப்பகத்தை திறந்து வைத்தார். பெண் சிறைவாசிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ‘பெண் சிறைவாசிகளுக்கு அடிப்படை வசதிகள் உட்பட, தேவையான வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும்’ என, டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.