உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லட்டுக்கு கலப்பட நெய் சப்ளை புகார் தனியார் நிறுவன உரிமம் நிறுத்தம் ரத்து

லட்டுக்கு கலப்பட நெய் சப்ளை புகார் தனியார் நிறுவன உரிமம் நிறுத்தம் ரத்து

சென்னை:திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் சப்ளை செய்த தாக எழுந்த குற்றச்சாட்டில், திண்டுக்கல் ஏ.ஆர்., டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.நெய், பால் பவுடர், பனீர் உட்பட பால் சார்ந்த பல்வேறு பொருட்கள் உற்பத்தியில், திண்டுக்கல், 'ஏ.ஆர்., டெய்ரி புட்' என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

உத்தரவு

இந்த நிறுவனம், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க தேவையான நெய் அனுப்ப, திருப்பதி தேவஸ்தானத்துடன் கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, நெய் அனுப்பி வந்தது.இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏ.ஆர்., டெய்ரி புட் நிறுவன உரிமத்தை, கடந்த பிப்ரவரி, 14ல் தற்காலிமாக நிறுத்தி வைத்து, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், டெய்ரி நிறுவனம் சார்பில், ராஜதர்ஷினி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீதிபதி வி.லட்சுமி நாராயணன், நேற்று பிறப்பித்த உத்தரவு:ஏ.ஆர்., டெய்ரி புட் நிறுவன உரிமத்தை, பிப்ரவரி, 14ல் தற்காலிமாக நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை, நெய் உற்பத்திக்கான உரிமம் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக, அதிகாரிகள் கருத வேண்டும். மற்ற பால் பொருட்கள் உற்பத்தியை தொடரலாம்.

அதிகாரி முடிவு

இந்த உத்தரவு ஆறு வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதற்குள், நெய் உற்பத்திக்கான உரிமத்தை மட்டும் நிறுத்தி வைப்பதா அல்லது அனைத்து பால் பொருட்களுக்கான மொத்த உரிமத்தை நிறுத்தி வைப்பதா என்பது குறித்து, உரிமம் வழங்கும் அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்படமான நெய் சப்ளை செய்ததாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி முடிவுக்கு வந்து, நிறுவனத்தின் அனைத்து பால் பொருட்களையும் நிரந்தரமாக தடை செய்ய விரும்பினால், சட்டத்துக்கு உட்பட்டு உரிமத்தை ரத்து செய்யலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை