தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கில் சக்சேனாவுக்கு 15 நாள் சிறை
சென்னை : 'மாப்பிள்ளை' படத்தின் தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கில், கைது செய்யப்பட்ட, 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி சக்சேனா, சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார். 'மாப்பிள்ளை' படத்தின் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு அப்படத்தை, 17 கோடி ரூபாய்க்கு ஜபக் விற்றுள்ளார். இதில், 15 கோடி ரூபாயை ஜபக்கிற்கு, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் கொடுத்துள்ளது. மீதமுள்ள இரண்டு கோடி ரூபாய்க்கு கோவை பகுதிக்கான வினியோக உரிமையை வழங்கியது.
சில நாட்கள் கழித்து ஜபக்கை தொடர்பு கொண்ட சக்சேனா, படத்திற்கு அதிக பணம் கொடுத்து விட்டதாகவும், நான்கு கோடி ரூபாய் திருப்பித் தர வேண்டும் என கேட்டுள்ளார். பணத்தை தர ஜபக் மறுத்த நிலையில், அவரை மிரட்டி, 2.45 கோடி, 92 லட்ச ரூபாய் என, இரண்டு தவணையாக, 3.37 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர். இது குறித்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து சக்சேனா உள்ளிட்டவர்கள் மிரட்டியுள்ளதாக, ஜபக், கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் புழல் சிறையில் இருக்கும் சக்சேனாவை சம்பிராதயப்படி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என, அரசு வழக்கறிஞர்கள் கோபிநாத், மேனுவல் அரசு ஆகியோர், நேற்று முன்தினம், 17வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. கோர்ட்டில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.