பிரச்னைகளை திசை திருப்பவே கவர்னருக்கு எதிராக போராட்டம் * தி.மு.க., மீது வானதி குற்றச்சாட்டு
சென்னை:''மக்களின் கவனத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி கூறினார். அவர் அளித்த பேட்டி: சென்னையில் கவர்னருக்கு எதிராக, 'கெட் அவுட் ரவி' என்ற போஸ்டரை, தி.மு.க.,வினர் ஒட்டியுள்ளனர். கவர்னருக்கு எதிராக மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தங்களது சித்தாந்ததிற்கு எதிராக கவர்னர் உள்ளதால், எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அவரை தி.மு.க., அவமானப்படுத்த நினைக்கிறது. கவர்னரை அச்சுறுத்தி, தன்னுடைய செயல்பாடுகளில் இருந்து அவரை பின்வாங்க வைக்க, மறைமுகமாக இந்த வேலை செய்கின்றனர். சட்டசபைக்குள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளை வெட்டி, ஒட்டி வெளியிடுகின்றனர். கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கின்றனர். ஆனால், அமைச்சர்களின் பதிலை மட்டும் முழுமையாக வெளியிடுகின்றனர். விருந்தினரை ஒவ்வொரு வீடுகளிலும் உயர்வாக பார்ப்பர். ஆனால், கவர்னரை சட்டபைக்கு வரவழைத்து அவமானம் செய்துள்ளனர். அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசாமல், மக்களின் கவனத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல; ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை, தி.மு.க., அரசு உணர்ந்துள்ளது. அதனால், மக்கள் பிரச்னைப் பற்றி பேசினால் பதற்றம் அடைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.