உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு தடை திட்டமிடப்படாத பணியால் திணறும் பொதுமக்கள்

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு தடை திட்டமிடப்படாத பணியால் திணறும் பொதுமக்கள்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை நகரில், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல், மாடவீதியில் சிமென்ட சாலை அமைத்தல், நகரை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடப்பதால், நகரில் சாலை முழுதும் பள்ளம் தோண்டப்பட்டு, வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் திட்டமிடப்படாத பணியால், மக்கள் அவசர தேவைக்கு கூட மருத்துவமனை செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

முற்றிலும் தடை

திருவண்ணாமலை நகரில் மாடவீதி என அழைக்கப்படும், தேரடி வீதி, திருவூடல் வீதி, மேற்கு கோபுர வீதி, பெரிய வீதிகளில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி, 2023ல், 16 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.அப்போது மேற்கு கோபுர வீதி, பெரிய வீதி ஆகியவற்றில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி முடிந்தது. நான்கு மாதங்களாக தேரடி வீதி, திருவூடல் வீதியில், இரண்டாம் கட்டமாக, 15 கோடி ரூபாய் செலவில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியான மாடவீதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.சென்னை, பெங்களூரு, விழுப்புரம், காஞ்சி உட்பட ஒன்பது இணைப்பு சாலைகளின் வழியாக, திருவண்ணாமலை நகருக்குள் வரும் கார் உட்பட வாகனங்களை, நகருக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காமல், ஆங்காங்கே தடுப்பு வைத்துள்ளனர். இதனால், வெளியூர் பக்தர்கள் கோவிலிற்கு எவ்வாறு செல்வது, எங்கு கார் பார்க்கிங் செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.

தடுப்பு அமைப்பு

மாடவீதியை சுற்றியுள்ள இணைப்பு தெருக்களில், வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்காமல், ஆங்காங்கே கம்பி தடுப்புகள் அமைத்துள்ளனர்.மேலும், நகரின் முக்கிய வீதியான கட்டபொம்மன் தெரு, ஆடு தொட்டி தெரு, முகல்புறா தெரு, சன்னிதி தெரு, உட்பட பல முக்கிய தெருக்களில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டு, ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாகவும், பைக்குகள் கூட போக முடியாத அளவிற்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.இதனால், நகரிலுள்ள பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியூர் மக்களும் நகருக்குள் வர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் அவசர தேவைக்கு மளிகை, மருந்து கடை, தனியார் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தவிப்பு

பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகின்றனர்.அவர்கள் அவதிப்படுவதை உணராமல், நகரில் கால்வாய் அமைத்தல் பணியை பகுதிவாரியாக செய்யாமல், ஒரே நேரத்தில் நகரை சுற்றி, தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பணியை ஒரே நேரத்தில் செய்வதால், நகர மக்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியூர் மக்கள் உள்ளே வர முடியாமலும் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை