| ADDED : மே 27, 2025 05:30 AM
மதுரை: திருச்சி மாவட்டம் முருங்கப்பட்டி தனியார் வெடிபொருள் ஆலைக்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பொதுநல வழக்கை தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கிலான கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது.முருங்கப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: முருங்கப்பட்டியில் வெற்றிவேல் வெடிபொருள் (எக்ஸ்புளோசிவ்) நிறுவனத்தில் 2016 டிச.,1 ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் இறந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது. உரிமத்தை ரத்து செய்து திருச்சி டி.ஆர்.ஓ.,உத்தரவிட்டார். இதை எதிர்த்து நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வு முன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அமர்வு,'மனுதாரர் சம்பந்தப்பட அதிகாரியிடம் விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனிநபர்களும் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரி விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை 2017 ல் பிறப்பித்தது.நிறுவனத்திற்கு நிபந்தனைகளுக்குட்பட்டு தடையில்லாச் (என்.ஓ.சி.,) சான்றை டி.ஆர்.ஒ.2018 ல் வழங்கினார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: நிறுவனம் 1998 முதல் செயல்படுகிறது. அப்போது முசிறி ஆர்.டி.ஓ.ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது. ஆய்வின்போது அருகே மருத்துவமனை, வீடுகள், அரசு கட்டடங்கள், பள்ளிகள் அல்லது கோயில்கள் இல்லை. அனுமதிக்கப்பட்ட சர்வே எண்களைத் தவிர வேறு எந்த நிலத்தையும் நிறுவனம் ஆக்கிரமிக்கவில்லை.நிறுவனம் தரப்பு: மனுதாரருக்கு நிறுவனத்துடன் தனிப்பட்ட பகை உள்ளது. தனது கோரிக்கையை நிறைவேற்றாவிடில் எவ்வாறு தொழில் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி நிறுவனத்தை மிரட்டினார். 2016ல் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் முடித்த பின், தடையில்லாச் சான்று மீண்டும் பெறப்பட்டது. நிறுவன செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி டி.ஆர்.ஓ.,ஆய்வு செய்து விசாரித்தபின்தான் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்க போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் நோக்கில் நிபந்தனைகளுடன் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நேர்மையான பொதுநல வழக்கு அல்ல. மாறாக நீதிமன்ற நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதாகும். பொதுநல வழக்கை தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கிலான கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. டி.ஆர்.ஓ.,வின் உத்தரவில் தலையிட எந்த காரணத்தையும் காணமுடியவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.