உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஈரப்பத நெல் கொள்முதல்; மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு

தமிழகத்தில் ஈரப்பத நெல் கொள்முதல்; மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு

சென்னை : மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2024 செப்., 1ல் துவங்கியது. இது, வரும் ஆகஸ்டில் நிறைவடைகிறது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது.ஜனவரியில் பொங்கல் முடிவடைந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. அம்மாவட்டங்களில் அம்மாத இறுதியில் மழை பெய்ததால், நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, தமிழகம் அரசு ஜன., 21ல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அடுத்த நாளே நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதிக்க, நான்கு பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, அதற்கு அடுத்த நாளே டெல்டா மாவட்டங்களுக்கு வந்து, நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ததுடன், மாதிரியை எடுத்து உணவு கழக ஆய்வகத்தில் பரிசோதித்தது. அதன் அடிப்படையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசுக்கு ஜன., இறுதியில் பரிந்துரை செய்தது. இந்த பணி முடிவடைந்து, 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த ஒப்புதல் தராமல், மத்திய அரசு தாமதம் செய்கிறது.இது குறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நெல்லின் ஈரப்பத முடிவு தொடர்பாக, மத்திய உணவு அமைச்சகத்தில் தொடர்ந்து பேசப்படுகிறது. ''ஈரப்பத உயர்வு குறித்து, விரைவாக தகவல் தெரிவிக்கப்படும் என்று தொடர்ந்து பதில் வருகிறது. ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ