உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குவாரி குத்தகை காலம் 30 ஆண்டுகளாக மாற்றம்

குவாரி குத்தகை காலம் 30 ஆண்டுகளாக மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருங்கல் குவாரிகளுக்கான குத்தகை கால உச்சவரம்பை, 30 ஆண்டு களாக, கனிமவளத்துறை மாற்றியுள்ளது.தமிழகத்தில், தனியார் பட்டா நிலங்களில், 3000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இதுபோன்ற குவாரிகளை இயக்க, கனிமவளத்துறையிடம் குத்தகை அனுமதி பெற வேண்டியது கட்டாயம். தமிழக அரசின் சிறு கனிமங்களுக்கான சலுகை விதிகளில், குத்தகைக்கான கால வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நிலப்பரப்பை பார்க்காமல், குத்தகை காலம், 5 ஆண்டுகள் என, நிர்ணயிக்கப்பட்டு வந்தது. 2020ல் குத்தகை கால வரம்பு நிர்ணயிப்பதில், நிலத்தின் பரப்பளவு அடிப்படையில், சில கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டன. அதன்படி, 12 ஏக்கர் வரையிலான நிலத்தில், குவாரிக்கான குத்தகை காலம், 10 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தபடியாக, 12 முதல் 25 ஏக்கர் வரையிலான நிலங்களில், 15 ஆண்டுகளாகவும், அதற்கு மேற்பட்ட நிலங்களுக்கு, 25 ஆண்டுகள் எனவும், குத்தகை காலம் நிர்ணயிக்கப்பட்டது.

மீண்டும் திருத்தம்

தற்போது, இந்த விதிகளை கனிமவளத்துறை மீண்டும் திருத்தி உள்ளது. இதன்படி, 12 ஏக்கர் வரையிலான நிலங்களுக்கு, 15 ஆண்டுகள் வரை குத்தகை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, 24 ஏக்கர் வரையிலான நிலங்களுக்கு, 20 ஆண்டுகள் என்றும், 24 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு, 30 ஆண்டுகள் என்றும், குத்தகை கால உச்சவரம்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம், கருங்கல் குவாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், குத்தகை காலம் முடிந்த பின், சம்பந்தப்பட்ட நிலத்தில் கனிமவளத்தின் அளவுகள் ஆராயப்பட்டு, அதன் அடிப்படையிலேயே புதிய குத்தகைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், கனிமவளத் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழக மணல் மற்றும் எம் - சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: கருங்கல் குவாரிக்கு வழங்கப்படும் அனுமதியை, பெரும்பாலான உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகளால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குத்தகை காலத்தை, 30 ஆண்டுகள் வரை நீட்டிப்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு பின், குவாரிகள் இருந்த இடங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்படும். இதில் முறைகேடுகள் மேலும் அதிகரிப்பதுடன், அரசுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்படும். இந்த திருத்தத்தை, அரசு திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறாத நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
மே 21, 2025 11:21

சுயோ மோட்டோ ???


Svs Yaadum oore
மே 21, 2025 07:32

300 ஆண்டுகள் குத்தகை காலம் என்று மாற்றி விட்டால் கொள்ளையடிக்க வசதி .....அல்லது நாட்டில் உள்ள கருங்கல் குவாரி மொத்தமும் அறிவாலயத்திற்கு சொந்தம் என்று பட்டா எழுதி வைத்து விட்டால் நிரந்தர நிவாரணியாக அமையும் ...


KRISHNAN R
மே 21, 2025 07:32

கோவிந்தா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை